அன்று முதல் இன்றுவரை சங்கம் வைத்தே தமிழும் கலாச்சாரமும் வளர்க்கப்பட்டு வருகிறது, சங்கம் தொடங்கி அதைச் சிறப்பானவகையில் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும் அந்தவழியில் இதோ அயல்நாட்டு மண்ணில் அதுவும் நம் கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய நாட்டில் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கி தற்பொழுது பத்தாவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வை நடத்திவருகிறது பிராங்போர்ட் தமிழ்ச் சங்கம்.
2015 ஆண்டு சங்க நிகழ்வுகள்
05.07.2015 : பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க துவக்க விழா
பணி நிமித்தமாக ஐரோப்பியமண்ணான ஜெர்மன் நாட்டில் குடியேறிய நம் தமிழ் நண்பர்கள் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கையில் சந்தித்துக்கொள்வதும், சில நேரங்களில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதுமென இருந்த நட்பு அடுத்த கட்டமாக குடும்பத்தோடு சந்தித்துக்கொள்வது என நகர்ந்தது .
ஆனால் இது மட்டும் போதாது என யோசித்த நம் தமிழ் நண்பர்கள் தமிழ் ச் சங்கம் ஆரம்பிக்கலாமென தங்களுக்குள் பேசி முடிவெடுத்தனர் .
ஐரோப்பிய நாடுகளிலேயே ஏன் உலக அளவில் மிகவும் கடுமையான அரசுப்பணித்துறை கொண்ட நாடு ஜெர்மனி, இங்கு நாம் ஒரு சிறு முயற்சி செய்யவேண்டுமெனில் ஏராளமான நடைமுறைகளை பின்பற்றவேண்டும், நிறைய கோப்புகளை தயார் செய்து அதை கொடுத்து நீண்ட காத்திருத்தலுக்குப்பிறகே நமக்கான அனுமதி கிடைக்கும் .
தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கும் நம் தமிழ் நபர்களை இந்த நடை முறைகள் பாதித்தாலும் அவர்களை தடுத்துவிடவில்லை . ஆளுக்கு ஒரு 5௦ யூரோ பங்குத்தொகையாகக் கொண்டு வெற்றிகரமாக தமிழ்ச் சங்கம் பிராங்போர்ட் தமிழ்ச் சங்கம் e.V என ஜெர்மன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பிராங்போர்ட் நகரில் பதிவுசெய்யப்பட்டது, 05.07.2015 நாள் பிராங்போர்ட் தமிழ்ச் சங்கம் துவங்கப்பட்டது .
20.09.2015: பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் – ஏர் இந்தியா கிரிக்கெட் போட்டி
எப்போதும் போல் தங்களுக்குள் மட்டும் கிரிக்கெட் விளையாடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாமென முடிவெடுத்த சங்க நிர்வாகிகள், அந்த கால கட்டத்தில் பிராங்பேர்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள நரகரங்களில் குறிப்பிடப்படும்படியாக எந்த ஒரு இந்திய மக்கள் சங்கம் செயல்படவில்லை ஆகையால் ஆங்காங்கே உள்ள நம் இந்திய நண்பர்களை சென்று சந்தித்து அவர்களையும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு அழைத்தோம்.
ஏர் இந்தியா மற்றும் பிராங்போர்ட் தமிழ்ச்சங்கம் இணைந்து முதல் முறைக்காக FTS-AirIndia Cricket Cup 2015 கிரிக்கெட் போட்டியை நடத்தியது, இந்திய மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி பிராங்பேர்ட் நரகில் நடைபெறுவது இதுவே முதல் முறை .
இந்த கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்த கன்னட மற்றும் ஒரிய மக்கள் நம்முடைய பிராங்பேர்ட் தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் சங்கம் துவங்குவது பற்றி கேட்டு அறிந்து கொண்டனர், இதுவே அவர்களுக்கு தங்கள் கன்னட சங்கம் மற்றும் ஒரிய சங்கம் தொடங்க முதல் தூண்டுதலாக அமைந்தது.
இந்த கிரிக்கெட் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்று சுமார் 2000 மக்கள் கலந்து கொண்டனர், FTS-Air India cup கிரிக்கெட் போட்டியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றியது. மேலும் இந்த நிகழ்ச்சி இந்திய மக்களை ஒருங்கிணைத்து தற்பொழுது நம்முடைய இந்திய துணைத் தூதரகம் நடத்தும் இந்திய நாள் (India Day) நிகழ்வுக்கு ஒரு தொடக்கப்புள்ளி என்றால் அது மிகையாகாது.
10.10.2015: கடம் பயிற்சி பட்டறை
கிரிக்கெட் நம் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் அதுமட்டும் நம் மக்களை ஒன்றிணைக்க போதாது எனவே மற்றுமொரு நிகழ்வாக கடம் பயிற்சி வகுப்பை நடத்தியது, இதன் மூலம் கடம் கருவியை கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது .
கிரிக்கெட் மட்டுமே நம் கலாச்சாரமில்லையே அதையும் தாண்டி நம் இசை கருவிகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது நம் கடமையல்லவா .
20.12.2015: கிறிஸ்துமஸ் விழா
சங்கம் தொடங்கியவுடன் விளையாட்டு மற்றும் இசை பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றது ஆனால் இந்தியர்களின் கலாச்சாரம் திருவிழாக்களோடு இணைந்ததுதான், அப்படி இருக்க நாம் ஒரு திருவிழா கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்ட சங்கம், அதற்கு சரியான நிகழ்வாக இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் துவங்கியது, பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா என பெயரிட்டு மிகச் சிறப்பாக ஜெர்மன் நாட்டு மக்களோடு இணைந்த கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியது .
2015 ஆண்டு தமிழகம் மிகப்பெரும் துயர நிகழ்வை சந்தித்தது , அந்த வெள்ள சேதத்தை நாம் யாரும் மறக்கமுடியாது ,அதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மீண்டும் நிகழாமலிருக்க இயற்கையை வாங்குவோம் மற்றும் பேணிக்காப்போம். தமிழக வெள்ள நிவாரணத்திற்காக பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் உதவிக்கரம் நீட்டியது, நிவாரணத்தொகை சேகரித்து அதன்மூலம் வெள்ள பாதித்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆடைகள்,நோட்டுப்புத்தகங்கள், மற்றும் பல பொருட்கள் வழங்கப்பட்டது. தேசம் தாண்டி இருப்பினும் நம் மக்களுக்கு உதவி தேவைப்படுகையில் உடனடியாக செயல்பட்டது நம் சங்கம். இந்த உதவியை FTS ஆலோசனையுடன் களத்திலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் அங்குள்ள மக்களுக்கு வழங்கினர்.
2016 ஆண்டு சங்க நிகழ்வுகள்
07.02.2016: முதல் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்
ஒரு சங்கம் சிறப்பாக செயல் பட அவ்வப்போது கூடி தங்களது கருத்துக்களை குழுவினருடன் கலந்துபேசி ஒருமனதாக முடிவெடுத்து வழிநடத்துவதே சரியான செயல்முறை. ஆகவே சங்கம் ஆரம்பித்து முதல்முறையாக ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் நாம் அடுத்து நம் சங்க நிகழ்வுகளை எப்படி நடத்தலாம் எந்தெந்த கொண்டாட்டங்களை சங்கத்தில் சேர்க்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
17.04.2016 : பிராங்பேர்ட் தமிழ்ச்சங்க கலைத் திருவிழா
முதல் முறையாக பிராங்பேர்ட் தமிழ்ச்சங்க கலைவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு , வெகு சிறப்பாக நம் கலாச்சார நடனம் மற்றும் பாரம்பரிய கலைகளை நம் கலாச்சாரத்திற்கு முற்றும் தொடர்பில்லாத இந்த ஜெர்மன் நாட்டின் பிராங்பேர்ட் நகரில் தமிழ் மட்டுமல்லாது அனைத்து இந்திய கலைவிழாவாக கொண்டாடினோம்.
25.06.2016 : இந்திய பல்கேரிய கலாச்சார பரிமாற்ற கூட்டு நிகழ்ச்சி
நம் கலாச்சாரம் நம் பெருமை அந்தவகையில் அந்த பெருமை மிகு கலாச்சாரத்தை மற்றொரு நாட்டினருக்கு பயிற்றுவித்து அவர்களோடு இணைந்து இந்திய பல்கேரிய கலாச்சார பரிமாற்றம் (Parade Der Kultur) எனும் மாறுபட்ட ஒரு கூட்டுநிகழ்ச்சி பிராங்பேர்ட் நகரில் அரங்கேற்றினோம்.
அன்றைய நாளில் இந்த நிகழ்ச்சி பல்வேறு மக்களை வெகுவாக கவர்ந்தது, பிராங்பேர்ட் நகரின் ஆற்றின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை ஏராளமான மற்ற நாட்டினர் கண்டு பாராட்டினர்.
09.07.2016 : கலாச்சார விளையாட்டு தினம்
தமிழ்ச்சங்கம் நடனம் மட்டுமல்லாமல் விளையாட்டுகளையும் நம் சங்க நிகழ்ச்சிகளில் இணைத்தது, இந்த முறை ஒரு கலாச்சார விளையாட்டு தினமாக கொண்டாடியது. எப்போதும் போல் கிரிக்கெட் மட்டும் என்றில்லாமல் பல்வேறு விளையாட்டுகள் அதுவும் நம் மண் சார்ந்த பல விளையாட்டுகளை நாம் வெற்றிகரமாக நடத்தி அதில் வெற்றி பெற்ற நம் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் குறிப்பாக விளையாட்டுகளில் கலந்து கொள்ள அதிகம் வாய்ப்பு கிடைக்காத நம் பெண்கள் இதில் கலந்துகொண்டு அசத்திய அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
30.10.2016 : செவி வழி தொடு சிகிச்சை முறை பயிற்சி வகுப்பு
நம் நாட்டின் தட்பவெப்பம் வேறு அங்கு பிறந்து வளர்ந்த நம்முடைய உடலும் மனமும் அதற்கேற்ப பக்குவப்பட்டிருக்கும் ஆனால் தற்பொழுது பணி, வியாபாரம் அல்லது படிப்பு என பல்வேறு காரணங்களால் நாட்டை தாண்டி வேறு ஒரு சீதோஷ்ண நிலை உள்ள நாட்டில் வாழ்ந்து வருகிறோம் ஆகவே நமக்கு அவ்வப்போது சிறு சிறு உடல் உபாதைகள் வருவதை எதிர்த்து நாம் சமாளிக்க இந்த முறை மருத்துவம் சார்ந்து ஒரு நிகழ்ச்சி ”செவி வழி தொடு சிகிச்சை முறை” பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தது . இதன் மூலம் நம் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று நலமுடன் வாழும் பயிற்சி முறையை கற்று பயன்பெற்றனர்.
05.11.2016 : தீபாவளி கொண்டாட்டம்
இந்திய கலாச்சாரம் பற்றி எழுதவோ, பேசவோ முயலும்போது எப்படி நாம் தீபாவளி கொண்டாட்டத்தை விடமுடியதோ அதுபோலத்தான் இங்கு வாழும் நம் மக்கள் எப்படி தீபாவளியை விட முடியும் எனவே தீபாவளி கொண்டாட முடிவு செய்தோம். புதுத்துணி, பலகாரம், மத்தாப்பு என நம் நாட்டில் கொண்டாடுவது போல மிக சிறப்பாக தீபஒளித்திருநாளை சிறப்பாக கொண்டாடினோம்.
2017 ஆண்டு சங்க நிகழ்வுகள் ….
21.01.2017 : பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
தமிழ்த்திருவிழா கொண்டாட்டங்களில் மிக முக்கியமான தமிழர்திருநாளான பொங்கல்திருவிழா நம் சங்கத்தின் சார்பாக வெகுசிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டது. பொங்கல் என்றவுடன் யாருக்குத்தான் பிடிக்காது நம் மக்கள் அனைவரும் அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தப்பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் .குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு நம் மண்ணின் பெருமைமிகு பொங்கல்விழாவை கண்டு பங்குபெற ஒரு வாய்ப்பாக அமைந்தது.
28.05.2017: FTS கலை விழா 2017
சென்றஆண்டின் கலைவிழா பெரும் சிறப்பைபெற்றதால் இனி ஒவ்வொருஆண்டும் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளில் கலைவிழாவை ஒரு கொண்டாட்டமாக இடம்பெறச்செய்து, அதே சிறப்புடன் இந்த ஆண்டும் கலைவிழா நடைபெற்றது.
23.06.2017 : சர்வதேச யோகா தினம்
பொதுவாக நாம் செய்யும் பயிற்சிகள் நம் உடலை வளப்படுத்தவே உதவுகிறது ஆனால் மன பயிற்சியைப்பற்றி பெரிதும் அக்கறைகாட்டுவதில்லை. யோக கலையானது உடல் மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும் ஒரு அற்புதக்கலை. யோக கலையை நம் முன்னோர்கள் கற்று உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் பெரு வாழ்வு வாழ்ந்தனர் என்பதை நாம் அறிவோம் . அப்படிப்பட்ட சிறப்புமிகு யோக கலையை உலக மக்கள் அனைவரும் கற்று அதன் பயன்பெற ஐ நா அமைப்பானது 2014 ம் ஆண்டு உலக யோகா தினத்தை கொண்டாட அறிவுறுத்தியது, ஜூன் 21 ம் நாளை உலக யோகா தினமாக அறிவித்தது அதன் பிறகு 2015 ம் ஆண்டுமுதல் உலக யோக தினத்தை ஜூன் 21 ம் நாள் அகிலம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய உடலையும் மனதையும் திடப்படுத்தும் கலையை இங்கு ஜெர்மன் நாட்டில் வாழும் நம் மக்களும் கற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச யோகா தினம் பிராங்பேர்ட் தமிழ்சங்கத்தின் மூலமாக கொண்டாடப்பட்டது.
09.09.2017 : கலாச்சார விளையாட்டு தினம்
வழக்கம்போல சிறப்பாக இந்தமுறையும் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் கலாச்சார விளையாட்டுவிழா வெளி விளையாட்டுத்திடலில் கோலாகலமாக நடைபெற்றது.
22.10.2017: தீபாவளி கொண்டாட்டம்
உலக நாடுகளில் புது வருடப்பிறப்பையே வெடி மற்றும் மத்தாப்பு வைத்து கொண்டாடப்படுகிறது ஆனால் இந்தியர்களாகிய நாம் புத்தாண்டைவிட தீபாவளியை சிறப்பாக வெடி, மத்தாப்பு வைத்து கொண்டாடுவோம் ஆகவே இந்த வருடமும் அதுபோல மத்தாப்போடு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம்.
2018 ஆண்டு சங்க நிகழ்வுகள் ….
20.01.2018 : பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது, பிராங்பேர்ட் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
17.02.2018 :ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்
ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் மக்களிடம் நிறை குறைகளை பகிரச்சொல்லி பெறுவோம் அதனை அந்த ஆண்டு நடைபெறும் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதிப்போம், இந்த ஆண்டு பொதுகுழுக்கூட்டம் 17.02.2018 அன்று நடைபெற்றது.
29.04.2018 : FTS கலை விழா 2018
இந்த ஆண்டின் கலைவிழா சற்று மாறுபட்ட விழா ஏற்பாடுகளுடன் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அற்புதமாக நடைபெற்றது.
23.06.2018 :சர்வதேச யோகா தினம்
கலை மற்றும் விளையாட்டு விழாக்கள் போல யோகா தின கொண்டாட்டமும் நம் சங்க நிகழ்வுகளில் ஒன்றாகிப்போனது , இந்த ஆண்டு யோகா தினம் அதிகப்படியான மக்களின் பங்கேற்போடு நடைபெற்றது.
01.09.2018 : இந்தியா நாள்
முதல் முறையாக பிராங்பேர்ட் நகரில் இந்தியா நாள் எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது , இந்தியத்துணைத்தூதரக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் பங்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. 2015 ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியே இந்தியா நாள் விழா நடக்க ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்ததது.
08.09.2018: கலாச்சார விளையாட்டு தினம்
இந்தமுறை புதுப்புது விளையாட்டுகளோடு பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் கலாச்சார விளையாட்டுவிழா கொண்டாடப்பட்டது.
11.11.2018 : தீபாவளி கொண்டாட்டம்
இந்த ஆண்டின் தீபஒளித்திருநாள் சிறப்பாக அனைவரும் கூடி கொண்டாடிமகிழ்ந்தனர்.
2019 ஆண்டு சங்க நிகழ்வுகள் ….
20.01.2019 : பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
சென்ற ஆண்டுபோலவே இந்த ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது , பிராங்பேர்ட் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
27.04.2019 : FTS கலை விழா 2019
விழாக்களின் பெயர் மட்டும் அப்படியே இருப்பினும் ஒவ்வொருமுறையும் புதுப்புது நடனம்,புதிய முகங்கள், வேறுபட்ட முயற்சிகள் என இந்த ஆண்டின் கலைவிழா மக்கள் கரகோசத்துடன் அரங்கேறியது
11.05.2019: இந்திர தனுஷ்
இந்திய கலாச்சாரம் மிகவும் சிறப்புக்குரியது , ஒவ்வொரு மாநிலமும் மொழிமட்டுமல்லாமல் , கலாச்சார , ஆடை, நடனம், இசை, என ஒவ்வொரு விதத்திலும் சிறப்புக்குரியது அத்தகைய சிறப்பை மற்றவர் அறியும் வகையில் கொண்டு சேர்ப்பது நம் போன்ற சங்கங்களின் செயல்பாடுகளில் ஒன்றுதான் எனவே நம் கலாச்சார சிறப்பைப் போற்றும்வகையில் இந்திர தனுஷ் என்ற பெயரில் மாபெரும் கலாச்சார விழாவை இந்தியத்துணைத்தூதரகம் ஏற்பாடு செய்தது , இந்தியாவின் அனைத்து பெருமைமிகு கலாச்சாரங்களை ஒருங்கிணைத்த இந்த விழாவில், தென்னிந்திய கலாச்சார குழுக்களை ஒருங்கிணைத்து விழா ஏற்பாடுகளை நடத்தும் பெரும் பொறுப்பு பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது . இந்த விழா வெற்றிகரமாக நடைபெற்று இந்திய கலாச்சாரத்தின் பெருமைகளை ஜெர்மன் நாடறியச்செய்ததில் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கத்தின் பங்கு மிக முக்கியமானது .
19.06.2019 :சர்வதேச யோகா தினம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரும் கலந்துகொண்ட உலக யோகா நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டும் நடைபெற்றது.
31.08.2019 : : இந்தியா நாள்
இந்த ஆண்டும் இந்தியா நாள் இந்தியத்துணைத்தூதரக ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்றது, இதுபோல் ஒவ்வொரு வருடமும் இனி இந்தியா நாள் நிகழ்ச்சியை நடத்துவதுபற்றி விவாதிக்கப்பட்டது.
14.09.2019 : கலாச்சார விளையாட்டு தினம்
விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு என்று அந்தக்காலத்தில் சிலர் சொல்லி கேட்டிருப்போம் ஆனால்இன்று விளையாட்டு என்பது நம்மை நாம் ஆரோக்கியமாகமாகவும் , உறுதியுடன் இருக்க வைக்கும் ஒரு சிறப்பான பழக்கம் என்பது பலரும் அறிந்த உண்மை ஆகவே இந்த முறையும் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் சிறப்பானதொரு விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்தது.
09.11.2019: தீபாவளி கொண்டாட்டம்
2019 ஆண்டின் தீப ஒளித்திருநாள் அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.
2020 ஆண்டு சங்க நிகழ்வுகள் ….
19.01.2020 : பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக நமது சங்க உறுப்பினர்கள் பங்குபெறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது மேலும் இந்தமுறை பொங்கல் விழாவோடு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது . பொங்கல்விழாவை சிறப்பித்த மக்கள் அடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் , சங்க செயல்பாடுகளின் நிறை குறைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
03.05.2020 : கூட்டாஞ்சோறு -1
உலகம் இதுவரை பார்த்திராத பெருந்தொற்று அனைவரையும் ஆட்டிப்படைத்தது , அரசு ஆணைப்படியும் , மக்கள் தங்களை காத்துக்கொள்ளவும் , மேலும் தொற்று பரவாமல் தடுக்கவும் மக்கள் தனிமைப்பட்டிருந்தனர் . ஒருவரை ஒருவர் சந்திக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கொண்டிருந்தோம்
நாம் தனிமைப்பட்டிருந்தபோது கொரோனா தொற்றுப்பரவாமல் நம்மை காத்துக்கொண்டோம் ஆனால் தனிமைச்சிறையினால் நம் மனம் பாதிக்கப்பட்டதென்பதை நாம் மறுக்கமுடியாது .ஆகையினால் பிராங்பேர்ட் தமிழ் சங்கம் ”கூட்டாஞ்சோறு -1 ” தனித்திரு இணையவழி இணைவோம் என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியால் வேவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் இணையவழியில் இணைந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி மிகவும் இக்கட்டான நிலையில் அனைவருக்கும் ஒரு ஆறுதலைத்தந்தது. தனிமைப்பட்டிருந்தபோதும் உள்ளத்தால் இணைந்திருந்தோம் .
21.06.2020 : கூட்டாஞ்சோறு -2
கொரோனா பரவல் முடிந்தபாடில்லை , மேலும் தனிமைப்படுத்தலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனவே மீண்டும் ”கூட்டாஞ்சோறு -2 ” தனித்திரு இணையவழி இணைவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
28.06.2020 : கூட்டாஞ்சோறு – 2
”கூட்டாஞ்சோறு – 2 தனித்திரு இணையவழி இணைவோம் நிகழ்ச்சியின் அடுத்த சந்திப்பு நடைபெற்றது.
2021 ஆண்டு சங்க நிகழ்வுகள் ….
21.05.2021 : கொரோனா நிவாரண நிதி
கொரோனா எனும் கொடிய தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி திரட்டி நம் நாட்டு மக்களுக்கு உதவிசெய்யப்பட்டது . குறிப்பாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு இல்லாமல் பெரும் உயிரிழப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது எனவே அந்த நேரத்தில் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் இங்கிருந்து ஆக்ஸிஜன் குடுவைகளை வாங்கி இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது .
கொரோனா எனும் கொடிய தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி திரட்டி நம் நாட்டு மக்களுக்கு உதவிசெய்யப்பட்டது . குறிப்பாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு இல்லாமல் பெரும் உயிரிழப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது எனவே அந்த நேரத்தில் பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் இங்கிருந்து ஆக்ஸிஜன் குடுவைகளை வாங்கி இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது .
2022 ஆண்டு சங்க நிகழ்வுகள் …
03.12.2022 : ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்
கொரோனா தோற்று சற்று குறைய ஆரம்பித்த பிறகு , மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள தொடங்கியபின் இந்தஆண்டின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
2023 ஆண்டு சங்க நிகழ்வுகள் …
22.01.2023 : பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
பிராங்பேர்ட் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளின் மக்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
30.04.2023 :FTS கலை விழா 2023
சற்று இடைவெளிக்குப்பின் நடைபெறும் மிகப்பெரிய கலைவிழா , சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டது மட்டுமில்லாமல் அவர்கள் தங்களின் இந்திய , ஜெர்மன் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துவந்து சிறப்பு சேர்த்தனர்.
அனைவரும் விரும்பும்படியான சுவையான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
18.06.2023 : சர்வதேச யோகாதினம்
சர்வதேச யோகாதினம்- சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.
24.06.2023 : கலாச்சார விளையாட்டு தினம்
இந்தவருடமும் கலாச்சார விளையாட்டு விழா வெளி அரங்கில் நடைபெற்றது , நம் மண்ணின் சிறப்புமிக்க , நாம் குழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
11.11.2023: தீபாவளி கொண்டாட்டம்
வழக்கம்போல் இந்த ஆண்டின் தீபஒளித்திருநாள் சிறப்பாக அனைவரும் கூடி கொண்டாடிமகிழ்ந்தனர் . சிறப்பான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஐரோப்பிய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் தமிழக விஞ்ஞானியான திரு. ரமேஷ் செல்லத்துரையை மரியாதை செய்து பிராங்பேர்ட் தமிழ்ச்சங்கம் பெருமைகொண்டது.